கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் - தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள் 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

அறச்சலூர் அருகே தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகேயுள்ள கொலங்காட்டுவலசு மாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் ஏந்தி ஈரோடு - பழநி சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது, ஈரோட்டில் இருந்து அறச்சலூரை நோக்கி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. பக்தர்கள் மீது மோதி, காயப்படுத்திய கார் அங்கிருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.

விபத்தில் வடக்கு வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40), கண்ணம்மாள் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42), கணபதி, அம்மணி, மகேஸ்வரி, ரஞ்சித், பொன்னுசாமி, விஸ்வநாதன், ராமசாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பழனிசாமி இறந்தார். காரை ஓட்டி வந்த அவல்பூந்துறை காளிபாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் (32), அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகி யோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்த வர்களையும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்