மேகேதாட்டுவில் அணை கட்டும் பிரச்சினை - தமிழக அரசியல் கட்சிகள் பேச மறுப்பதுவிவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது : பி.ஆர்.பாண்டியன் வேதனை

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சினை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பேச மறுப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தெரிவித்துள்ளது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணையை கட்டி, தமிழகத்துக்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற வக்கிர புத்தியோடு கர்நாடகம் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசும் இதற்கு துணை போகிறது. இந்த சூழலில் அதை தட்டிக்கேட்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முன்வராதது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் மட்டுமே போராட வேண்டும் என்கிற நெருக்கடி தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும்பட்சத்தில், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராகவும் கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் கர்நாடக முதல்வரின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் உரிய உத்தரவாதம் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்