பயிற்சிக் காலம் நிறைவடைந்த பிறகும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கான பயிற்சிக் காலம் முடிவடைந்த நிலையில், அவர்களின் பணிக்காலத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் காலவரையறையின்றி நீட்டிப்பு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் சா.ம.ஹரிகணேஷ் தலைமையில் பயிற்சி மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னுக்குப் பின் முரணான இந்த நடவடிக்கை, இளம் மருத்துவர்களின் உழைப்பைக் குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும். இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்புத் தேர்வுக்கும், இதர போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், அவர்களுடைய எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, பயிற்சிக்காலம் முடிவடைந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கவில்லை. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க கிளைச் செயலாளர் நவீன் தலைமையில் நேற்று பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago