அவிநாசி, திருப்பூரில் - ரூ.11.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

அவிநாசி பழங்கரை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பெருமாநல்லூர் நோக்கி முட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியில் சோதனை செய்தனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சத்து 27,810-ஐ பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டியில் இருந்து வந்து கொண்டிருந்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஹரிஸ் என்பவரது இருசக்கர வாகனத்தில் சோதனை செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 50,600-ஐ பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் பிரிவு அருகே நேற்று காலை பறக்கும் படை அதிகாரி பழனிச்சாமி தலைமையில் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த எஸ்.வி. காலனி சுரேஷ்குமார் (28) என்பவரை நிறுத்தி காரில் சோதனையிட்டனர்.

அதில் இருந்த ரூ.1 லட்சத்து 31,600-ஐ பறிமுதல் செய்தனர். எம்.எஸ்.நகரை சேர்ந்த கார்த்திக் (30) என்பவரது காரில் இருந்த ரூ.1 லட்சத்து 10000-ஐ பறிமுதல் செய்து, அதனை திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் பார்வையாளர் விஜயலட்சுமியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதேபோல, புஷ்பா திரையரங்க வளைவு சந்திப்புப் பகுதியில், பறக்கும் படை அதிகாரி ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பனியன் வியாபாரி நித்தின் (26) என்பவரது காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்