சாலை அமைத்துதரப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி - சாலை வசதியில்லாததால் போதைமலைக்கு செல்லாத வேட்பாளர்கள் : மலைக் கிராம மக்கள் வேதனை

By கி.பார்த்திபன்

சாலை வசதியில்லாததால் தேர்தல் சமயங்களில் கூட அரசியல் கட்சி வேட்பாளர்கள் போதைமலைக்கு வாக்குச்சேகரிக்க வருவதில்லை. மலையடிவாரம் மட்டும் வரும் வேட்பாளர்கள் நாங்கள் வெற்றி பெற்றால் மலைக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படுமென உறுதியளித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று போதைமலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலை அமைந்துள்ளது. இம்மலையில் உள்ள கீழூர் ஊராட்சி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேலூர், கெடமலை, தெற்குகாடு உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் விளைபொருட்கள் அனைத்தும் ராசிபுரம், பட்டணம், வடுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். எனினும், சாலை வசதியின்மை காரணமாக விளைபொருட்கள் அனைத்தும் அங்குள்ள மலைக்கிராம மக்கள் தலைச்சுமையாகவே விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதில், பல்வேறு இடர்பாடுகள் நிலவுவதால் பலர் விவசாயத் தொழிலை கைவிட்டதுடன் அங்கிருந்து வெளியேறி மலையடிவாரத்தில் வசித்து கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தேர்தல் சமயங்களில் மலையடிவாரம் வரை வரும் வேட்பாளர்கள் போதைமலைக்கு சாலை வசதி அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளித்துச் செல்வர். எனினும், மலையில் உள்ள கிராமங்களுக்கு வருவது கிடையாது.

சாலை வசதியில்லாததால் கரடு முரடான பாதையில் 6 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும். இது சவாலானது என்பதால் இதுவரை எந்த வேட்பாளரும் மலைக்கு வந்து வாக்கு சேகரித்ததே இல்லை, என மலையடிவாரத்தில் வசிக்கும் போதமலை மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போதைமலை கிராம மக்கள் கூறியதாவது:

போதமலையில் கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். சாலை வசதியில்லாததால் மலைக்கிராம மக்கள் மலையடிவாரத்தில் குடியேறியுள்ளோம்.

சாலை இருந்தால் அங்கு விளைவிக்கப்படும் பொருட்களை விற்பனைக்கு கொண்டுவர வாய்ப்பாக இருக்கும். சாலை வசதி செய்து தருவதாக தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி மட்டும் அளிக்கும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பின்னர் கண்டுகொள்வதே இல்லை.

இதுபோல் மலைக்கு எந்தவொரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வந்ததே இல்லை. மலையடிவாரத்தோடு வாக்குச் சேகரிப்பை முடித்துக் கொண்டு சென்றுவிடுவர். ஒரு நாள் 6 கி.மீ., தூரம் நடப்பதற்கு சிரமப்படும் வேட்பாளர்கள், பல தலைமுறையாக இந்த கரடு முரடான பாதையில் நாங்கள் நடந்து செல்வதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்