கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தலைமை பூசாரி உட்பட 11 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கோயிலில் குண்டம் திருவிழா நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கரோனா தொற்று அச்சம் உள்ளதால், பக்தர்கள் பங்கேற்பின்றி குண்டம் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது. இதன்படி, கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிப்பது என்பதுள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக அளித்த கரும்புகளைக் (விறகு) கொண்டு நேற்று முன் தினம் இரவு குண்டம் வார்க்கப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணி அளவில், தாரை தப்பட்டைகள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்ஸவர் குண்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. குண்டத்தைச் சுற்றியும் கற்பூரம் ஏற்றியும், மலர்களைத் தூவியும் பூஜை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமை பூசாரி ராஜேந்திரன் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, கோயில் பூசாரிகள், படைக்கலப்பூசாரிகள் என 10 பேர் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீணை அலங்காரத்தில் அருள்பாலித்த பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.
பக்தர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவர். அதோடு, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியதும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார். கரோனா கட்டுப்பாடுகளால் இம்முறை இந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago