விராலிமலை தொகுதியில் - விதிமுறைகளை மீறுவோர் மீதுபாரபட்சமின்றி நடவடிக்கை வேண்டும் : பறக்கும் படையினருக்கு ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

விராலிமலை தொகுதியில் நடைபெறும் வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஆய்வு செய்தனர்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீரபாண்டியன் வீட்டில் அண்மையில் மேற்கொண்ட வருமான வரித்துறையினரின் சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அமைச்சரின் அண்ணன் உதயகுமாருக்கு சொந்தமான கல்லூரி, 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பரிசுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதேபோல, பணம் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகர் 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகத்தில் அதிக தொகை செலவழிக்கும் தொகுதிகளில் ஒன்றாக விராலிமலை உள்ளதால், இங்கு பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வாகன சோதனை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பறக்கும்படையினர் முறையாக வாகன சோதனையை மேற்கொள்கின்றனரா என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.உமா மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை காலாடிப்பட்டி, பூதகுடி, நவம்பட்டி போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, ‘‘அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனையிட வேண்டும். தேர்தல் விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும்.

இதேபோன்று, எந்நேரத்திலும், எந்த பகுதிக்கும் சென்று நான் ஆய்வு செய்வேன். எனவே, தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தொய்வின்றி பணியாற்ற வேண்டும்’’ என வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்