திருப்பத்தூர் அருகே வெளி மாநில மதுபானங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 41 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலை கண்காணிப்பு குழுவினர், உள்ளூர் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்பனை, மதுபானம் கடத்தல் மற்றும் பதுக்கல், சாராய விற்பனை உள்ளதா என்பதை கண்காணிக்க மாவட்ட காவல் துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் குழுவினர் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் வேலன் நகர் அருகே சாலை யோரம் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று காலை தகவல் அளித்தனர்.
அதன்பேரில், தனிப்படை காவல் குழுவினர் வேலன் நகர் பகுதிக்கு விரைந்து சென்று காரை சோதனையிட்டபோது அதில் கர்நாடகா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங் கள் பெட்டி, பெட்டியாக இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்தபோது சுமார் 350 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கணக் கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, காருடன் மது பானங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்து திருப்பத்தூர் பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சந்திரனை கைது செய்த காவல் துறையினர் மதுபான கடத்தலில் மேலும் தொடர்புடைய நபர்கள் யார், தேர்தலை முன்னிட்டு வெளி மாநில மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago