ஏழ்மைக்கு மாற்று இலவசங்களாக இருக்க முடியாது என்று உதகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார். ஏடிசி பகுதியில் உதகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சுரேஷ்பாபுவை ஆதரித்து அவர் பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் கட்சிகள்தான் வளர்ச்சியடைந்துள்ளன, நாட்டில் பெரிய வளர்ச்சி நடக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலத்தில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களது வேட்பாளர்களை நீங்கள் தேர்வு செய்தால், சட்டப்பேரவையில் உங்களது குரலாக அவர்கள் இருப்பார்கள். நீலகிரி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் குளிரூட்டும் காய்கறி சேமிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் நிர்ணயிக்கப்படும், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறும்போது ‘‘வருமான வரித்துறை சோதனையில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை கருத்து திணிப்பாகவே பார்க்கிறேன். தேர்தல் ஆணையம் பணப்புழக்கத்தை குறைத்தால் மட்டுமே தேர்தல் நேர்மையாக நடக்கும். நான் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago