செய்யாறு காவல் நிலையத்தை தமுமுகவினர் நேற்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனை மாற்றக்கோரி, செய்யாறு உட்பட 3 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணி மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
இந்நிலையில், ஆரணியை தலைமையிடமாக கொண்டுபுதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியதால் தூசி கே.மோகனுக்கு கண்டனம் எழுந்தது. இது தொடர்பாக செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக் குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சுவரொட்டி ஒட்டப்பட்டதால், தூசி கே.மோகனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, சுவரொட்டி ஒட்டியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சுவரொட்டி ஒட்டியதாக செய்யாறை சேர்ந்த சபீர் என்பவரை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து செய்யாறு காவல்நிலையத்தை தமுமுகவினர் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், சுவரொட்டி அச்சிட்ட நபர்களை விட்டுவிட்டு, ஒட்டியவரை கைது செய்வது சரியா? என கேள்வி எழுப்பினர்.
இந்த தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது, கைது செய்யப்பட்ட சபீரை விடுவிக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து தமுமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago