திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி - வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குள் : மாதிரி வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுரை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்குத் தொடங்கி 7 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்தி முடிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மொத்தம் 6,028 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு கணினி குலுக்கல் முறையில் தொகுதி ஒதுக்கீடு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.

அதன்படி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 1,472 அலுவலர்கள், நாட்றாம்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,496 அலுவலர்கள், வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,558 அலுவலர்கள், ஆம்பூர் இந்து ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1,472 அலுவலர்கள் என மொத்தம் 4 மையங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்புகளை ஆட்சியர் சிவன் அருள் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘ஏற்கெனவே தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு அனைத்து தேர்தல் நடைமுறைகளும் தங்களுக்கு தெரியும் என அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஒவ்வொரு நிகழ்வையும் திரும்பத் திரும்ப கேட்டு மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்தினம் உங்களுக்கு மிக முக்கியமான நாள். வாக்குச்சாவடிக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே முடித்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கான படிவங்களையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நாளில் மாதிரி வாக்குப்பதிவை காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் முடிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு நடத்த யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி செயல்பட வேண்டும். பின்னர், இயந்திரங்களில் உள்ள வாக்குகளை அழித்து வாக்குப்பதிவை முகவர்கள் முன்னிலையில் தொடங்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலையில் அனைத்து படிவங்கள், இயந்திரங்களை ஒவ்வொன்றாக பொறுமையாக தயார் செய்ய வேண்டும். சிறிய கவன சிதறலும் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு கிடைக்காதவர்களுக்கு அடுத்த வகுப்பில் வழங்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடிக்க அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்