தேர்தல் பறக்கும்படை சோதனையில் சோகம் - சிவகங்கையில் அரசு பஸ் மோதி சிறப்பு எஸ்ஐ உட்பட இருவர் மரணம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் மீது அரசு பஸ் மோதியதில் சிறப்பு எஸ்ஐ, காவலர் உயிரிழந்தனர்.

சிவகங்கை அருகே ஊத்திகுளம் இளையான்குடி சாலையில் நேற்று காலை 9 மணிக்கு வட்டாட்சியர் அசோக்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கையில் இருந்து தாயமங்கலத்துக்குச் சென்ற அரசு சிறப்பு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் திருப்பாச் சேத்தியைச் சேர்ந்த மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு சிறப்பு எஸ்ஐ கர்ணன் (51), ஆயுதப்படைக் காவலர் பாலசுப்ரமணியன் (32), லாடனேந்தலைச் சேர்ந்த சந்தனக்குமார் (30), ஆவரங்காட்டைச் சேர்ந்த காரல்மா்க்ஸ் (31) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கர்ணன் இறந்தார். தீவிர சிகிச்சைக்காக பாலசுப்ரமணியனையும், சந்தனகுமாரையும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பாலசுப்ரமணியன் இறந்தார். சந்தனகுமார், காரல்மார்க்ஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த சிறப்பு எஸ்ஐ. கர்ணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலசுப்ரமணியனுக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநர் சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த குமாரை சிவகங்கை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த கர்ணன், பாலசுப்ரமணியனின் உடல்களுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், சிவகங்கை எஸ்பி ராஜராஜன் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்