திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் இருந்து நம்பியூர் செல்லும்பிரதான சாலையில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. அங்குள்ள நுழைவுவாயில் பகுதி சாலையை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு மருத்துவமனைக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாலை முன் உள்புறமாக உள்ள நுழைவு வாயிலை, நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் மாற்றியமைக்கும் கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கின. இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "நம்பியூர் சாலை - கொண்டத்துக்காளியம்மன் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, நுழைவுவாயில் முன் கதவு அமைத்து பாதையை மறிக்க முற்பட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதையை மறித்து கதவு அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதுகுறித்து தனிநபர் மற்றும் பொது நல வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது, நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், நம்பியூர் செல்லும் பிரதான நெடுஞ்சாலை முன் உள்ள நுழைவுவாயிலை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாற்றி அமைக்க கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்றனர்.
பெருமாநல்லூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், எந்தவிதப் பணியும் செய்யக்கூடாது என்றனர். இதையடுத்து, கட்டுமானப் பணி கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago