ரப்பர், நூல் விலை உயர்வைக் கண்டித்து - எலாஸ்டிக் நிறுவனங்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் : முதல் நாளில் ரூ.2 கோடி உற்பத்தி இழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது எலாஸ்டிக். உள்ளாடைகள் முதல் பனியன்கள் வரை எலாஸ்டிக்கின் பயன்பாடு உள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. எலாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான ரப்பர், நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரப்பர் ரூ.180-ஆக இருந்தது. தற்போது ரூ.350-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, லைக்ரா ரூ.400-ல் இருந்து ரூ.750 வரை உயர்ந்துள்ளது. பாலியஸ்டர் நூல் ரூ.80-ல் இருந்து ரூ.125-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல ரப்பர் விலையும் அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதனால் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரப்பர் விலை சீராக இருக்க, கேரளாவில் ரப்பர் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரப்பர் மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். முதல் நாளான நேற்றும் மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்