தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று கேக் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில். 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், நேர்மையுடன் வாக்களிப்போம், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கேக்குகள், மாதிரி வாக்குச்சாவடி மையம் வடிவிலான கேக்குகள், தமிழக வரைபடம் வடிவிலான கேக்குகள் என 35 வகையான 100 கிலோ எடையுள்ள 100 கேக்குகள் காண்போர் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சு.மலர்விழி பார்வையிட்டு கூறியது:
வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தங்கள் வாக்கை நேர்மையுடன் செலுத்த வேண்டும். விலைமதிப்பில்லாத நமது வாக்கை விலைக்கு விற்கக்கூடாது. நமது வாக்குரிமை நமது எதிர்காலம் என்பதை அனைவரும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
மகளிர் திட்ட அலுவலர் வாணிஈஸ்வரி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் த.கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago