கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக - பாஜக வேட்பாளர், திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது விதிகளை மீறி இரவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தென்னிலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஏவிஎம் முனையில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் சந்தியா தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இரு கார்களை சோதனையிட்டபோது, அதிமுக, பாஜக கொடிகள் இருந்தன. இதுகுறித்து சந்தியா கார் ஓட்டுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் அவரை மறித்து பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் அளித்த புகாரின்பேரில், பெயர் தெரியாத இரு கார் ஓட்டுநர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக, பாஜக மீது வழக்கு

அரவக்குறிச்சி அருகே சேந்தமங்கலம் கீழ்பாகம் கருப்பப்பட்டியில் தேர்தல் விதிகளை மீறி திமுக மற்றும் பாஜக வாக்குச்சாவடி அலுவலகங்கள் நேற்று முனதினம் திறக்கப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் கவிதா அளித்த புகாரின்பேரில், குரும்பப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன், பாஜகவைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது நேற்று முன்தினம் தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தென்னிலை வைரமடை பகுதியில் கடந்த 23-ம் தேதி இரவு 11.20 மணிக்கு அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் 10 பேர் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக, தென்னிலை போலீஸில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் அசோகன் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலை உள்ளிட்ட 11 பேர் மீது நேற்று முன்தினம் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்