திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தர விட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவ்வப்போது ஆய்வு செய்து முடிக்காத பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட தேவலாபுரம், சின்னவரிக்கம், மாச்சம்பட்டு பகுதியில் ஆட்சியர் சிவன் அருள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு தனியார் கட்டிடங்களில் தேர்தல் பிரச்சார சுவர் விளம்பரங்கள் வரையப் பட்டுள்ளதை கண்டு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை விசாரணை நடத்தினார்.
அதன்பிறகு, சின்ன வரிக்கம், மாச்சம்பட்டு சோதனைச் சாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையை ஆட்சியர் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி ஜெயின் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையப்பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப் பெட்டிகள் வைப்பறை, அங்கு மேற் கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு அம்சங்கள், வாக்கு எண்ணும் அறைகள், தடுப்புகள், வாக்குப் பெட்டிகளை வரிசைப்படுத்தி வைக்கவும், அதற்கான வைப் பறையில் தரையில் பெயின்ட் அடித்து எண்கள் குறிக்க ஆலோசனை வழங்கினார்.
அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லவும், வாக்கு எண்ணும் நாளில் அரசு அலுவலர்கள், முகவர்கள் தனித் தனியாக செல்ல வழித்தடங்கள் அமைப்பது குறித்தும் பொதுப் பணித்துறையினருக்கு ஆலோ சனைகளை வழங்கினார்.
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், ஜெயின் கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், வாக்கு எண்ணும் போது தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்ய அவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கவும், வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் பாது காப்புப்பணிகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் முடிந்து 25 நாட்கள் கழித்து வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் என்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தங்க தேவையான வசதிகளை அவர்களுக்கு செய்து தரவும், பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்குமாறு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago