ராயபுரம் அணைமேடு பகுதியில் கடந்த 4 தலைமுறைகளாக குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்டது ராயபுரம் அணைமேடு. இங்கு 200 குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தெற்குசட்டப்பேரவைக்கு உட்பட்ட பகுதி. கடந்த 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 200 வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, பல தலைமுறைகளாக போராட்டம் நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு, சாக்கடை வசதி என அடிப்படை வசதிகள் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குகேட்க மட்டும் அரசியல்வாதிகள் வருகின்றனர். அப்போது மட்டும் எங்கள்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கின்றனர். அதன்பின்னர் கண்டுகொள்வதே இல்லை. எங்களின் பிரச்சினைகள் 4 தலைமுறைகளாக தொடர்கிறது. குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மட்டும்தான் எங்களிடம் உள்ளன. எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. திருப்பூர் மாநகரின் பிரதான பகுதியில் வாழ்ந்தாலும், எவ்விதஅடிப்படை வசதிகளும் இல்லாததால் தனித்தீவில் வாழ்வதை போன்றுதான் உணர்கிறோம். நாங்கள் மின் கட்டணம் செலுத்தினாலும், எவ்வித அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி செய்து தரவில்லை. இதனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தெருக்களில் பதாகைகள் வைத்தும் சுவரொட்டிகள் ஒட்டியும் எங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவக்குமார் கூறும்போது ‘‘தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக, மாநகராட்சி உதவி ஆணையர்களிடம் விசாரிக்க சொல்லி உள்ளேன். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா விஷயம் என்பதால், வருவாய்த் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago