செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காவல் துறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ள மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களின் விவரங்கள் குறித்து மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் முன்னிலையில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அ.ஜான் லூயிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 699 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக மத்திய காவல் படை பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா, நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது வாக்குகளை பதிவிட தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.
மேலும் அப்பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையங்களை அமைக்கவும், மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காவல் துறையின் அணிவகுப்பு நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் குலாம் ஹசன் ஒபைதூர் ரஹ்மான், பிஜால் எ ஷா, உத்பால் பிஸ்வாஸ், ஆசிப் யூசுப், காவல் பார்வையாளர் வீரேந்திரா மிஸ்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago