பூதலூரில் புதிய மின் இணைப்புக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(62) என்பவர், தன் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்கக் கோரி பூதலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவருக்கு மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மின்வாரிய உதவி பொறியாளர் தனக்கொடி(52) கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆரோக்கியசாமி, இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அளித்த ஆலோசனையின்படி, பூதலூர் மின்வாரிய அலுவலகத்தில் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தனக்கொடியிடம் ஆரோக்கியசாமி நேற்று மதியம் வழங்கினார். அந்தப் பணத்தை தனக்கொடி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேசன், பத்மாவதி, சசிகலா மற்றும் போலீஸார் வெளியே வந்து, கையும் களவுமாக தனக்கொடியைப் பிடித்து, கைது செய்தனர்.
பின்னர், கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago