சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின பதிவேடு ஆய்வு வரும் 26-ம்தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன.
மனு தாக்கல் செய்துள்ளவேட்பாளர் களின் செலவினம் குறித்து தாங்கள் பராமரிக்கப்பட வேண்டிய 3 பகுதிகளை கொண்ட பதிவேடு வேட்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பகுதி - ஏ - வெள்ளை நிற பக்கங்களில் உள்ளவை அன்றாட கணக்குகள் பதிவேடு, பகுதி பி - இளஞ்சிவப்பு நிறப்பக்கங்களில் உள்ளவை ரொக்கப் பதிவேடு (பணப்பதிவேடு), பகுதி - சி மஞ்சள் நிறபக்கங்களில் உள்ளவை வங்கிப்பதிவேடு. இந்த 3 பாகங்களிலுள்ளபதிவேட்டில்வேட்பாளர்கள் செலவினங்களை முறையாக பதிவு செய்து, தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். இதனை, பிரச்சார காலத்தில் குறைந்தது 3 முறை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்வதற்காக அளிக்க வேண்டுமென தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: திருப்பூர் வடக்கு தொகுதிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26-ம் தேதி முதல்கட்டமாகவும், 30-ம் தேதி 2-ம் கட்டமாகவும், ஏப்ரல் 3-ம் தேதி 3-ம்கட்டமாகவும், அவிநாசி (தனி) தொகுதிக்கு அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையே வரும் 27, 31 மற்றும் ஏப். 4-ம் தேதிகளிலும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 26, 30, ஏப்ரல் 3-ம் தேதிகளிலும், பல்லடம் தொகுதிக்கு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 27, 31, ஏப்ரல் 4-ம் தேதிகளிலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
இதேபோல, காங்கயம் தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26, 30 மற்றும் ஏப்ரல் 3-ம் தேதிகளிலும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 27, 31 மற்றும் ஏப்ரல் 4-ம் தேதிகளிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26, 30 மற்றும் ஏப். 3-ம் தேதிகளிலும், உடுமலை தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 27, 31 மற்றும் ஏப். 4-ம் தேதிகளிலும் 3 நாட்களுக்கு ஆய்வுகள் நடைபெறுகின்றன.
மேற்குறிப்பிட்ட நாட்களில் வேட்பாளரோ அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவரோ வேட்பாளர்களின் செலவின பதிவேடுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago