சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த கூடாது : தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆட்சியர் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற உள்ளசட்டப்பேரவைத் தேர்தலில் சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ராகேஷ்குமார் வர்மா, கைலாஷ் சந்த் குப்தா மற்றும் தேர்தல் காவல் துறை பார்வையாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, “தேர்தல் பிரச்சாரத்தின்போது கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது.

நகரப்புறப் பகுதிகளில், பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. கிராமங்களில் தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யலாம். அதேபோல் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி பெற வேண்டும். சில இடங்களில் அனுமதி இல்லாமல் பயன்படுத்துகின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். அதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் இரா.பன்னீர்செல்வம், ப.ராஜேந்திரன் (சிப்காட்) மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

நகரப்புறப் பகுதிகளில், பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. கிராமங்களில் தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE