வேலூரில் தொழிலாளி தவற விட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் மீட்ட காவல் துறையினர் உரிய நபரிடம் ஒப் படைத்தனர்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). தொழிலாளி. இவர், பித்தளை பாத்திரங்கள் வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் பணத்துடன் வேலூர் சுருட்டுக்காரர் தெருவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். பணத்தை ஒரு சிறிய பையில் வைத்து பொட்டலம் போல சுருட்டி சட்டைப் பையில் வைத்திருந்தார். சுருட்டுக்கார தெருவில் சென்றபோது அவரது சட்டைப் பையில் வைத்திருந்த பணம் தவறி விழுந்துள்ளது. பாத்திரக்கடைக்கு சென்றபோது பணம் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுருட்டுக்கார தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரவிச் சந்திரன் பையில் இருந்து பணம் தவறி விழும் காட்சி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதனை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதுடன் பணத்தை எடுத்தவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை மீட்டனர்.
இந்நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், ரூ.50 ஆயிரம் பணத்தை ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார். தவறவிட்ட பணத்தை கண்காணிப்பு கேமரா உதவியுடன் மீட்டு ஒப்படைத்த காவல் துறையினருக்கு ரவிச் சந்திரன் நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago