செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மண் மற்றும் கல்குவாரி இயங்கி வருகின்றது. தச்சூர் கிராமத்தை சுற்றியுள்ள 14 கிராமங்கள் விவசாயத்தையே நம்பியுள்ளன. இந்த விவசாய நிலங்களை சுற்றி அமைந்துள்ள ஏரி, குளங்கள், மலைகள், மண் வளங்கள் விவசாயத்திற்கு மிக முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
ஆனால் தச்சூர் கிராமத்தில் மண் மற்றும் கல்குவாரியால் காற்று மாசு, கனிம வள சுரண்டல், விபத்துகள், கால்நடைகள் அழிவு என பல்வேறு அபாயங்கள் ஏற்படும் நிலை உள்ளது. குவாரியில் உள்ள மிக மிக கடினமான பாறைகளை பிளக்க பயங்கரமான சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து உடைக்கும் போது நில அதிர்வுகள் ஏற்பட்டு, வீடுகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை ஆகியவற்றில் விரிசல் அடைந்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, கல்குவாரியை உடனடியாக நிரந்தரமாக மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago