மூலப்பொருட்களின் விலை உயர்வு இரண்டு மடங்காக உயர்ந்ததை கண்டித்து வேலூரில் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட அச்சக உரிமையாளர் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் கிரு பானந்த வாரியார் சாலை அருகே அச்சக உரிமையாளர்கள் திரண்டு கருப்பு பட்டையுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கு, வேலூர் மாவட்ட அச்சக உரிமையாளர் சங்கத் தலைவர் கிருஷ்ண திலக் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், கவுரவ தலைவர்கள் சத்தியசீலன், ராஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஞான வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அச்சக பணிக்கு தேவையான காகிதம், அட்டை, ரசாயன மை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால், ஏற்கெனவே ஆர்டர் கொடுத்தவர்கள் விலை உயர்வை ஏற்க மறுப்பதுடன் பில் புத்தகங்கள், திருமண பத்திரிகைகள் அச்சடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என கோரி முழக்கமிட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago