வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப் பட்டிருந்த லாரி நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள உணவகம் முன்பு புறவழிச் சாலையில் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியில் இரு சக்கர வாகனம் ஒன்று, ஜெனரேட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், துணிகள், பாத்திரங்கள், அரிசி மற்றும் நெல் மூட்டைகள் போன்றவை இருந்தன.
புறவழிச்சாலையோரம் லாரியை நிறுத்திய ஒட்டுநர் உணவு அருந்த சென்றதாக கூறப்படுகிறது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், லாரியில் இருந்த பொருட்கள் பற்றி எரிந்தன.
இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டப்படுத்தினர்.
ஆனால், அதற்குள்ளாக லாரியில் இருந்த ஜெனரேட்டர் மற்றும் இரு சக்கர வாகனம் எரிந்து சேதமானது. முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
இந்த தீ விபத்தினால் லாரியில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியில் இருந்த பொருட்கள் மீது யாராவது தீ வைத்தார்களா? அல்லது வெப்பம் காரணமாக தானாக தீப்பற்றி எரிந்ததா? என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago