மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுவதால் - வாக்குச்சாவடி அலுவலர்கள் நேர்மையாகவும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டும் : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுரை

By செய்திப்பிரிவு

மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவதால் அப்பணியை நேர்மையாகவும், அச்சமின்றியும் மேற்கொள்ள வேண்டும்என வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள 8,560 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் நேற்று தொடங்கின.

இப்பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முக சுந்தரம் தொடங்கி வைத்து, வாக்குப்பதிவு நாளில் மின்னணு வாக்கு இயந்திரங்களை கையாள்வது எப்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளில் 8,560 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதற்காக, முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளன.

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணியை நேர்மையாகவும், அச்சமின்றியும் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கையேடு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் செய்யும் அரசு வேலையை விட இந்த பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளர்களை யும் உரிய ஆவணங்களை பரிசீலித்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

தற்போது, கரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி, முகக்கவசத்தை வாக்காளர்கள் அணிந்து வந்து வாக்களிப்பதை ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் மாலை 3 மணி வரை தனக்கு மாற்றாக ஒருவரை அமர்த்திவிட்டு வெளியே செல்லலாம். 3 மணிக்கு மேல் வேட்பாளர்களின் முகவர்கள் வெளியே சென்று மீண்டும் உள்ளே வர அனுமதியில்லை என்பதால் யாரையும் உள்ளே அனுமதிக் கூடாது. 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வரும் 27-ம் தேதி நடைபெறும். அந்த பயிற்சி வகுப்பிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணேஷ் (வேலூர்), புண்ணிய கோட்டி (காட்பாடி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலமுருகன், ரமேஷ், பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்