திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 145 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஒரு வாரமாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 187 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடை பெற்றது.
தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரது தலைமையிலும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களால் அங்கீகரிக் கப்பட்டவர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
தி.மலையில் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்பழகனின் மனு மீது பரிசீலனை நடைபெற்றபோது அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில், உரிய நேரத்துக்குள் கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுக்கவில்லை என கூறி அன்பழகன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மற்ற இடங்களில் சிறு சிறு வாக்குவாதங்களுக்கு இடையே, வேட்பு மனு பரிசீலனை சுமுகமாக முடிவடைந்தது. ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திமுக வேட்பாளர் அன்பழகன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
செய்யாறு
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகன், திமுக வேட் பாளர் ஜோதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பீமன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மயில் வாகனன், அமமுக வேட்பாளர் வரதராஜன் உட்பட 16 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.
வந்தவாசி
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத் குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரபாவதி, அமமுக வேட்பாளர் வெங்கடேசன், பாமக வேட்பாளர் முரளி உட்பட 13 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு, பாஜக வேட்பாளர் தணிகைவேல், அமமுக வேட்பாளர் பஞ்சாட்சரம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கமலக்கண்ணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் உட்பட 19 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 7 பேரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
போளூர்
போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திமுக வேட்பாளர் சேகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கலாவதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லாவண்யா, அமமுக வேட்பாளர் விஜயகுமார் உட்பட 19 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி, பாமக வேட்பாளர் செல்வகுமார், அமமுக வேட்பாளர் கார்த்திகேயன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுகானந்தம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு உட்பட 22 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. 5 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் சரவணன், தேமுதிக வேட்பாளர் நேரு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் உட்பட 19 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப் பட்டன. 7 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆரணி
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகன், அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன், தேமுதிக வேட்பாளர் பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணிகண்டன் உட்பட 20 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செங்கம்
செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கிரி, அதிமுக வேட்பாளர் நைனாக்கண்ணு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெண்ணிலா, தேமுதிக வேட்பாளர் அன்பு உட்பட 17 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago