திருவண்ணாமலையில் - அய்யாக்கண்ணு உட்பட 16 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் சக்கரபாணி என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி நேற்று பிற்பகல் வந்தனர்.

பெரியார் சிலை அருகே வந்தபோது, விவசாயிகளின் தற்போதைய நிலையை எடுத்துரைப் பதாக கூறி மனு தாக்கல் செய்ய வந்த விவசாயிகள் திரளாக வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது காவல் துறையிடம் தங்களை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அய்யாக்கண்ணு உள்ளிட்ட வர்கள் வலியுறுத்தினர். ஆனால்,காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்து விட்டது.

இது குறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, “புது டெல்லியில் நாங்கள் போராடியபோது எங்களை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த வாக்குறுதியில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவி தொகை மட்டும் வழங்கப்படுகிறது.

ஆனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு 2 மடங்கு லாபம் தருவது, 1 கிலோ நெல் விலையை ரூ.54 தருவது, கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது, ஒரு விவசாயிக்கு ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்குவது, மரபணு மாற்று விதைகளை இறக்குமதி செய்வது இல்லை என்ற உறுதியை நிறைவேற்றவில்லை. புதிய வேளாண் சட்டங்களால் மரபணு மாற்றப் பட்ட விதையை கொண்டு வரு கிறார்கள். இது நியாயமா?.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நாங்களும் போட்டியிடுகிறோம். இதற்காக, எங்கள் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் (மாற்று வேட்பாளர்) ஆகியோர் மனு தாக்கல் செய்ய வந்தனர்.

விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுக்காமல், விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு போன்றவற்றை மத்திய அரசு உருவிவிட்டதால், வேறு வழி இல்லாமல், எங்களது நிலையை உணர்த்தும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர். எங்களை, காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். இன்று (நேற்று) மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்துவிட்டது. எங்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் செயலை கண்டிக்கிறோம்.

அவர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும், இது தொடர்பாக தமிழகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்