வந்தவாசி திமுக எம்எல்ஏ அம்பேத்குமார் தனக்கு ரூ.2.75 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அம்பேத்குமார் எம்எல்ஏ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர் தனக்கும், தனது மனைவி ஜெயந்திக்கும் ரூ.2.75 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “தன்னிடம் ரூ.75 ஆயிரம் மற்றும் மனைவியிடம் ரூ.20,500 ரொக்கம் இருப்பதாகவும், வங்கிகள் உள்ளிட்டவற்றில் தனது பெயரில் முறையே ரூ.13,072, ரூ.2,500 மற்றும் ரூ.1,000, மனைவி பெயரில் முறையே ரூ.23,188 மற்றும் ரூ.10,251 வைப்பு தொகை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தனது பெயரில் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலும் 2 கார்கள், ரூ.30 ஆயிரம் மதிப்பில் ஒரு இரு சக்கர வாகனமும், மனைவியிடம் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆடி கார் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தன்னிடம் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 60 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் 350 கிராம் தங்க நகைகள், ரூ.7.25 லட்சம் மதிப்பில் வைர நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் அசையும் சொத்தாக தன்னிடம் ரூ.16,71,572 மற்றும் மனைவியிடம் ரூ.42,78,939 மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆராசூர் கிராமத்தில் 1.26 ஏக்கர் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தில் 7,554 சதுரடியில் வீட்டு மனை, சென்னை மேடவாக்கம் மற்றும் கீழ்கட்டளையில் குடியிருப்பு கட்டிடம் என தனது பெயரில் 2,09,09,280 மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும், மனைவி பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தில் ரூ.7,34,525 மதிப்பில் 4,600 சதுரடியில் வீட்டு மனை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்பேத்குமார் எம்எல்ஏ தனது பெயரிலும் மற்றும் மனைவி பெயரிலும் ரூ.2,75,94,319 மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 2019-20-ம் நிதியாண்டில், கட்டுமான தொழிலில் ஈடுபட்டதால் ரூ.5,05,000 வருமானம் ஈட்டியதாகவும், தனது மனைவி ஜெயந்தி ரூ.5,09,900 வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காண்பித்துள்ளார். இவர், தன் மீது 2 வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago