காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் உள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனம் மற்றும் காஸ் சிலிண்டர் கிடங்கில், தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் காஸ் சிலிண்டர் கிடங்கில் காஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் காஸ் சிலிண்டர் நிறுவன பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
மேலும், கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனத்தில் 20 லிட்டர் குடிநீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஒட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தலில் வாக்களிக்க உறுதி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சீனுவாச ராவ், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா, உதவித் திட்ட அலுவலர்கள் எழிலரசன், அமுல்ராஜ், வீரமணி, கங்கா கௌரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago