நூல் விலை உயர்வைக் கண்டித்து ஜவுளிக் கடைகளை அடைத்து போராட்டம் : ஈரோட்டில் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வைக் கண்டித்தும், கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் ஈரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

ஈரோட்டில் பிரதான தொழிலாக விளங்கும் ஜவுளி தொழிலுக்கு ஆதாரமான நூல் விலை, கடந்த ஆறு மாத காலத்தில், 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கரோனா பாதிப்பு காரணமாக ஜவுளித்தொழில் முடங்கிய நிலையில், நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நாளில், ஈரோட்டுக்கு முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள வந்ததால், இந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, அவரிடம் இதுதொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஈரோட்டில் நேற்று ஒரு நாள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். நூல்விலையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, ஜவுளித்தொழிலைக் காப்பாற்ற முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்