கரோனா இரண்டாவது அலை குறித்து பொதுமக்கள் அலட்சியம் செய்து வருவது அச்சமளிக்கிறது, என இந்திய மருத்துவச் சங்க தேசியத் துணைத்தலைவர் சி.என். ராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா இரண்டாவது அலை குறித்து பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர். இது அச்சமளிக்கிறது. நோயின் தீவிரத்தன்மை உணர்ந்து, அனைத்துத் தரப்பினரும் கட்டாயம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்திட வேண்டும். முகக்கவசங்களை அணிந்துதான் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு, மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டியது அவசியமாகும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் கூட முகக்கவசங்களை அணியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் பிரச்சாரத்தின்போது, முகக்கவசங்களை அணிந்து, முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும்.
கரோனா நோய்க்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்திட வேண்டியது அவசியம். எவ்வித அச்சமும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் கரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago