உதயநிதி ஸ்டாலினின் வாக் குறுதியை ஏற்று திருப்பத்தூர் நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திமுக வேட்பாளருக்காக நேற்று முதல் வாக்குசேகரிப்பில் ஈடுபடதொடங்கியதால் திமுக உடன் பிறப்புகள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்கும், தற்போதைய எம்எல்ஏவான நல்லதம்பிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த முறை வாய்ப்பை இழந்த நகரச்செயலாளர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்த முறை நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர் பார்த்தனர்.
அதேநேரத்தில், தற்போது எம்எல்ஏ மீது திமுக நிர்வாகிகளும் சிலர் அதிருப்தியில் இருந்தனர். காரணம், எம்எல்ஏ நல்லதம்பி தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களை தவிர மற்றவர்களுக்கு பெரிய அளவில் எதுவும் செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதனால், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்கு தான் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் அவரை வேட்பாளராக நினைத்து தேர்தலுக்கு முன்பே வெற்றிக்கான வியூகங்களை வழிவகுத்து, மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நகரச்செயலாளருக்கு தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
ஆனால், யாரும் சற்றும் எதிர்பார்க்காத முடிவை கட்சி தலைமை எடுத்தது. திருப்பத்தூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ நல்லதம்பிக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கி நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரனை மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தயவால் எம்எல்ஏ நல்லதம்பி இந்த முறையும் வாய்ப்பு வாங்கி விட்டதாக கட்சி நிர்வாகிகள் பரவலாக பேசத் தொடங்கினர்.
இதனால், நல்லதம்பிக்கு இந்த தேர்தலில் வேலை செய்ய மாட்டோம் எனக்கூறிய திமுக நிர்வாகிகள் சிலர் அவரது அலுவல கத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டு அங்குள்ளவர்களையும் தாக்கினர். இதனால், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜா வெற்றிபெறுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
திமுக நிர்வாகிகள் 2-ஆக பிரிந்து இருப்பதால் திருப்பத்தூர் தொகுதியின் வெற்றி கேள்விக் குறியாக மாறியுள்ளதாக கட்சி தலைமைக்கு தகவல் சென்றது. மேலும், எம்எல்ஏ கனவு தகர்ந்துப் போனதால் நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கட்சி அலுவலகத்தின் பக்கமே வராமல் தேர்தல் பணிகளை புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ‘‘கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் யாராக இருந் தாலும் அவர்களது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வேலை செய்ய வேண்டும். இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்த முறையும் கிடைக்காதா என்ன? அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரும், அதில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். மேலும், மாவட்டச்செயலாளர் அல்லது திமுக ஆட்சிக்கு வந்ததும் வாரிய தலைவர் என ஏதாவது ஒன்றை கட்சி தலைமையிடம் பேசி தருவேன்.
இதுவெல்லாம் நிறைவேற வேண்டுமென்றால் எம்எல்ஏ நல்லதம்பி மீண்டும் வெற்றிபெற வேண்டும். 234 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார் என நினைத்து அனைவரும் வேலை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே நமது ஒரே இலக்கு. நாம் இரண்டு பட்டு நின்றால் எதிர்த்து போட்டியிடுவோருக்கு பெரிய வாய்ப்பாக மாறிவிடும். எனவே, பகையை மறந்து திமுக வேட்பாளர் வெற்றிக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும்’’ எனக்கூறி எஸ்.ராஜேந் திரனை சமாதானம் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு, மாவட்டச்செயலாளர் பதவி, வாரியத் தலைவர் பொறுப்பு என அடுத்தடுத்த ஆசைகளை உதயநிதி ஸ்டாலின் தூண்டியதால் வேறு வழியின்றி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேர்தல் பணியை புறக்கணித்த நகரச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் நேற்று தனது அலுவலகத்துக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்தார். இதையடுத்து, திமுக வேட்பாளர் நல்லதம்பியும் அங்கு வரவழைக்கப்பட்டார்.
பிறகு 2 பேரும் ஒருவரை, ஒருவர் கட்டித்தழுவி 2 பேரும் சால்வை அணிவித்து சமாதான கொடியை காட்டினர். இதைக்கண்ட கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு, நல்லதம்பி வெற்றிக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு 2 வாரங்களே இருப்ப தால் காலை முதல் இரவு வரை தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்கு என நகரச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தெரி வித்தார்.
அதன்பிறகு அங்கு வந்த அனைவருக்கும் எம்எல்ஏ நல்லதம்பி சால்வை அணிவித்து தனக்கு ஆதரவு தருமாறு இரு கைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுத்துவிட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளருடன் நகரச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் நேற்று பிற்பகல் முதல் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிக்க வீதி, வீதியாக தனது ஆதரவாளர்களுடன் சென்றார். இதனால், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வெற்றிபெறுவது உறுதி என அக்கட்சி நிர்வாகிகள் உற்சாக மடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago