சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர், வாக்குப்பதிவு நாளன்று தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்துக்கொள்ள 15 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்துக்கொள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும்.
இதன்படி, தற்காலிக தேர்தல் அலுவலகம் 10-க்கு 10 அடி அளவில், வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீ சுற்றளவிற்கு அப்பால் இருத்தல் வேண்டும்.வாக்குச்சாவடி அமைவிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் இருப்பின், அப்பகுதியில் ஒரு தற்காலிக தேர்தல் அலுவ லகம் மட்டுமே அமைக்க வேண்டும். அலுவலகத்தில் ஒரு மேசை மற்றும் இரண்டு நாற்காலிகளும், இரு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.
தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்திட தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும். அனுமதியின் நகலினை தேர்தல், காவல்துறை அலுவலரின் தணிக்கைக்கு உட்படுத்த ஏதுவாக தற்காலிக தேர்தல் அலுவலகத்தில் வைத்திருத்தல் வேண்டும். இந்த அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு அலுவல்சாரா அடையாளச் சீட்டு மட்டுமே வழங்க வேண்டும். அதில் வேட்பாளர் பெயரோ, சின்னமோ, கட்சியின் பெயரோ இடம்பெறக்கூடாது.
இங்கு வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் கட்சியின் பெயர்அடங்கிய ஒரு அறிவிப்பு பலகை வைத்துக் கொள்ளலாம். வாக்குப் பதிவு செய்து முடித்த வாக்காளரை தேர்தல் அலுவலகத்தில் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.
வாக்குப்பதிவு செய்யச் செல்லும் வாக்காளர்களுக்கு எவ்விதத்திலும் இடையூறுகளோ, அச்சுறுத்தலோ செய்தல் கூடாது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தற்காலிக தேர்தல் அலுவலகம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களின் அருகில் அமைத்தல் கூடாது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், தற்காலிக தேர்தல் அலுவலக அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago