தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வரும்போது, அவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்த பின்னர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என ஈரோடு டி.ஆர்.ஓ. முருகேசன் தெரிவித்தார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில், கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வரும் அனைத்து மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் தினமும் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், அவர்களது விவரத்துடன் தினசரி அறிக்கை அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மாதிரி பரிசோதனை செய்து அறிக்கை அனுப்ப சுகாதாரத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியினை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் அனைவருக்கும் கட்டாயம் குறைந்த பட்சம் அபராதம் ரூ.200 விதிக்கப்படும்.
மேலும் கரோனா தடுப்பு விதிமுறை களை பின்பற்றாத நிறுவனங்கள் மீது குறைந்த பட்சம் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுவதுடன், நிறுவனத்தினை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர் களின் மீது கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும், தொழிலாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிவதையும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதையும் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பின்னர் தான் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்குமிடம், கழிவறைகள் மற்றும் தொழிற்சாலை வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சவுண்டம்மாள், முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஈரோடு மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago