வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் களிடம் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படுவதுடன், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய் யப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, "வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் குறைவாக காணப்பட்ட கரோனா தொற்று மார்ச் மாதம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் 228 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலை யில், மார்ச் மாதம் 15-ம் தேதி கணக்குப்படி 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 0.5 சதவீதமாக இருந்த கரோனா தொற்று இந்த மாதம் முதல் வாரத்தில் 0.9 சதவீதமாகவும், 2-வது வாரத்தில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்டத்தில் இரு சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
இல்லையென்றால், ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திவிட்டு மீண்டும் முகக்கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் வாகனமே பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக் கப்படும்.
அதேபோல, பொதுமக்கள் யாருக்கேனும் காய்ச்சல், தொடர் இருமல், சளி தொந்தரவு, மூச்சுத் திணறல், சுவை தெரி யாமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, வேலூர் மாவட்டத்தில் பேருந்து உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள், நடத்து நர்கள், ஓட்டல் மற்றும் தங்கு விடுதி உரிமையாளர்கள் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், வணிக வளாகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, நோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதில், மாநகராட்சி ஆணையர் சிவசங்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மாலதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், நகர் நல அலுவலர் சித்திரசேனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago