பணம், பரிசு பொருட்களை கடத்தி வருவதை கண்காணிக்க - தமிழக-ஆந்திர எல்லையில் கூடுதல் சோதனைச்சாவடி : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக–ஆந்திர எல்லைப்பகுதி களில் கூடுதல் இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண் டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அண்டை மாநில ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடனான தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து இணையவழி (ஆன்லைன்) ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபானம், சாராயம், பணம், பரிசுப்பொருட்கள் கடத்தி வருவதை கண்காணிப்பது குறித்தும், மாநில எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில காவல் துறையினர் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் இருந்து 27 கி.மீ., தொலைவில் ஆந்திர மாநிலம் உள்ளது. அதேபோல, வாணியம்பாடியில் இருந்து 31.6 கி.மீட்டரும், ஆம்பூரில் இருந்து 28 கி.மீட்டர் என மொத்தம் 86.6 கி.மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைகள் மற்றும் மலைப் பகுதிகள் அமைந்துள்ளன.

ஆந்திர மாநில எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலை வில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பச்சூர், கொத்தூர் மற்றும் திம்மாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட மாதக்கடப்பா பகுதியில் மதுவிலக்கு குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

அங்குள்ள மலைகளில் தயாரிக்கப்படும் சாராயம் திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒன்றாகும்.

எனவே, மாநில எல்லைப் பகுதிகளில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து வாகன சோதனையில் ஈடுபட ஆந்திர மாநில அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

எனவே, மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும். டாஸ் மாக் மதுபானக்கடைகளில் மது விற்பனை அதிகரித்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் தேவைப்படும் இடங் களில் கூடுதல் சோதனைச் சாவடிகள், நடமாடும் சோதனைச் சாவடிகளும் அமைத்துக் கொள்ளலாம்.

தேர்தலை முன்னிட்டு அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மது பானங்கள் கொண்டு வருவதை இரு மாநில அதிகாரிகளும் தீவிர மாக கண்காணிக்க வேண்டும்.

இரு மாநிலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடும் நேரம், அங்கு விற்பனை யாகும் மதுபான விவரங்கள், வழக்கமான விற்பனையை காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகும் சில்லறை மதுபானக்கடைகள் எது என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை இரு மாநில காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையிலும், எளிமையாகவும் பொதுமக்கள் முழு பாதுகாப்புடன் வாக்களிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன், சித்தூர் எஸ்பி செந்தில்குமார் உட்பட இரு மாநில உயர் அதி காரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்