திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் - திமுக, அமமுக வேட்பாளர்கள் உட்பட 24 பேர் மனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக, அமமுக, சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடந்த 12-ம் தேதி முதல் தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி, திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள நல்லதம்பி மீண்டும் போட்டியிடுவ தாக அக்கட்சி தலைமை அறிவித்தது. இதையடுத்து, திமுக வேட்பாளர் நல்லதம்பி நேற்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகர்க்கிடம் தாக்கல் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் திமுக வேட்பாளர் நல்லதம்பி கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை இத்தொகுதியில் செய்துள்ளேன். திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் பல முறை குரல் கொடுத்துள்ளேன்.

இந்த மாவட்டத்துக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் எனது தொகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்கள் திருப்பத்தூர் தொகுதிக்கு கொண்டு வரப்படும். குறிப்பாக, அரசு மருத்துவக்கல்லூரியை திருப்பத்தூர் தொகுதிக்கு கொண்டு வருவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்’’. என்றார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபு உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட உள்ள ஞானசேகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகர்க்கிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு, மாற்று வேட்பாளராக திருப்பத்தூரைச் சேர்ந்த அட்சயா க.முருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதேபோல, திருப்பத்தூர் தொகுதியில் 12 வேட்பாளர்கள், வாணியம்பாடி தொகுதியில் 3 வேட்பாளர்கள், ஜோலார்பேட்டை தொகுதியில் 5 வேட்பாளர்கள், ஆம்பூர் தொகுதியில் 4 வேட்பாளர்கள் என நேற்று ஒரே நாளில் 24 வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்