திருப்பூரில் போலியாக கார் ஏஜென்சி நடத்தி, தொழிலதிபரிடம் ரூ.94 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் கே.என்.எஸ்.கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த் சர்மா. தொழிலதிபரான இவருக்கு, திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அப்போது, தான் தனியார் வங்கியில் மேலாளராக இருப்பதாக கிருஷ்ணகாந்த் சர்மாவிடம் கூறியுள்ளார் கோகுலகிருஷ்ணன். இதனை உண்மை என கிருஷ்ணகாந்த் சர்மா நம்பி வந்துள்ளார். 2020 ஜனவரி மாதம் தான் வங்கி மேலாளர் பதவியில் இருந்து நின்றுவிட்டதாகவும் கோகுலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதன்பின், வாகன ஏஜென்சி தொடங்கி வங்கிகளில் இருந்து கார்களை ஏலத்தில் எடுத்து, கோகுலகிருஷ்ணன் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தொழிலை அபிவிருத்தி செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் அதிக லாபம் வரும் என்றும் கிருஷ்ணகாந்த் சர்மாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் ரூ.94 லட்சத்து 84300-ஐ ஆன் லைன் மூலமாக கிருஷ்ணகாந்த் சர்மா செலுத்தியுள்ளார். அதன்பின், ஒப்பந்தப்படி கோகுலகிருஷ்ணன் நடக்கவில்லை என்றும், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் அவரது அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணகாந்த் சர்மா கூறினார். இதுதொடர்பாக கோகுலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் கிருஷ்ணகாந்த்சர்மா அளித்த புகாரின்பேரில், மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, குடும்பத்துடன் கோகுலகிருஷ்ணன் தலைமறைவானார். விசாரணையில், பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் கோகுலகிருஷ்ணன் மோசடி செய்திருப்பதும், கார் நிறுவனம் நடத்தவில்லை என்றும், கார் ஏஜென்சி நடத்துவதாக கிருஷ்ணகாந்த்சர்மாவிடம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த கோகுலகிருஷ்ணனை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கோகுலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் மீண்டும் தலைமறைவானார்.
இந்நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன் தினம் இரவு கோகுலகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago