பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இம்மியளவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், ராசிபுரம் (தனி) - எம். மதிவேந்தன், சேந்தமங்கலம் (தனி) பி.பொன்னுசாமி, திருச்செங்கோடு ஈஸ்வரன் (கொமதேக), பரமத்தி வேலூர் கே.எஸ்.மூர்த்தி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் நடந்த ஊழல்களை ஆளுநரிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம். சில பிரச்சினைகளை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளோம். ஆட்சி மாற்றம் வந்தவுடன் தண்டிக்கப்படுவர். காற்றாலை, நிலக்கரி, மின்சாரம் கொள்முதல் ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது.
கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிடும்போது சொல்வார், சொன்னதைச் செய்வோம்-செய்வதைச் சொல்வோம் என்பார். அவர் வழியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். பெண்களுக்கு எப்போதும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது துணை நிற்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணம் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இம்மியளவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதேபோல் நகரப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளோம்.
கரோனா காலக்கட்டத்தில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். முடியாது என அரசு கூறியது. அதன்பின்னர், ரூ.1000 வழங்கினர். மீதமுள்ள ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரத்தில் புறவழிச்சாலை, பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம், நாமக்கல்லில் லாரி நலவாரியம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்களே அதேபோல் இந்தத் தேர்தலில் தரப்போகிறீர்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
‘ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயார்’
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் மற்றும் ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்செல்வன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் யாராலும் இதுவரை அறிந்து கொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்திய ஓபிஎஸ் ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால், முதல்வர் புதுகரடி விடுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் தான் காரணம் என்கிறார். அப்படியே வாதத்துக்கு இருந்தாலும், 4 ஆண்டுகளாக என்னை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க நான் தயாராகவே இருக்கிறேன். இந்த சவாலை முதல்வர் பழனிசாமி ஏற்க தயாராக உள்ளாரா.
கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் குழுவுக்கு இலவச அலைபேசி வழங்குவோம் என்றனர், அளித்தார்களா, இல்லவே இல்லை. திமுக தேர்தல் அறிக்கையை நகல் எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது.
அதேபோல, வடமாநிலத்தில் பிரபலமான ஏபிபி சி-வோட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தலில் திமுக 43 சதவீதம் ஓட்டுகளையும், அதிமுக 30 சதவீதம் ஓட்டுகளையும் பெறும் என தெரிவித்துள்ளது. நான் கூட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தான் பிடிக்கும் என்று கூறியிருந்தேன். தற்போதைய நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற்று, எதிர்கட்சியே இல்லாத ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago