தேர்தல் காலங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் தொகையை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா பேரிடர் காரணமாக கடந்த ஓராண்டாக வணிகர்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, வாகன சோதனை நடத்தும்போது வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். முறைகேட்டில் ஈடுபடும் அரசியல் வாதிகள் ஒருவரைகூட கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், வணிகர்களை சோதனை எனும் பெயரில் துன்புறுத்துவதைக் கண்டித்து பேரமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
பறக்கும்படை சோதனையின் போது வணிகர்கள் சமர்ப்பிக்கும் உரிய ஆவணங்களை அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஓரிரு நாளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளோம்.
எவ்வித ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் தொகை ரூ.50 ஆயிரம் என்பது மிகவும் சொற்பத் தொகை. எனவே, இதை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
மார்ச் 20-க்குப் பிறகு சென்னை யில் எங்கள் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் ஆலோசித்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வணிகர் களின் வாக்கு யாருக்கு என்பதை முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago