தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாங்கல் கிராமத்தில் வசித்தவர் பிரகாஷ்(25). இவர், தனது வீட்டில் இருந்து கடந்த 14-ம் தேதி வெளியே சென்றுள் ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கீழ்தாங்கல் கிராமம் குன்றுமேடு பகுதியில் இருந்து அவரது உடல் நேற்று முன் தினம் மாலை கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், பிரகாஷை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி மேலாரணி கிராமத்தில் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “கீழ்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்ததால், பிரகாஷை அந்த பெண்ணின் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.
அவர்களிடம் கலசப்பாக்கம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இது குறித்து கலசப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பு, மணி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், பலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் பிரகாஷ் தாக்கப் பட்டுள்ளதாகவும் மற்றும் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், பிரகாஷை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago