நூல் விலை உயர்வைக் கண்டித்து - பனியன் நிறுவனங்கள் அடையாள வேலைநிறுத்தம் : திருப்பூரில் ரூ.205 கோடி பின்னலாடை வர்த்தகம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 205 கோடி பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. நாள்தோறும் அதிகரிக்கும் நூல் விலை உயர்வால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்க முடியாதது, புதிய ஆர்டர்களை பெற முடியாதது, உற்பத்தி செலவு அதிகரிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

இதையடுத்து, திருப்பூரில் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று ஒருநாள் அடையாள பனியன் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இதனால், நேற்று காலை தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் திரண்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஊர்வலம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் முன்னிலை வகித்தார். சைமா சங்கத் தலைவர் ஏ.சி. ஈஸ்வரன், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைமை செயல் அலுவலர் பூபதி, திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

நூல் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் மற்றும் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள், உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் தொழில்துறையினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.205 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

உற்பத்தி இன்றியும், தொழிலாளர்கள் இன்றியும் பனியன் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடையடைப்பு போராட்டத்துக்கு தொழில்துறையினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்