விருதுநகர் மாவட்டத்தில் - நல்ல நேரம் பார்த்து திராவிட கட்சிகள் வேட்பு மனு : மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுகவினர் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட அஹிம்சா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதிமுக, திமுக வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து நேற்று பிற்பகலில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்று காலை 10.12 மணி வரை எமகண்டம் என்பதால் 12.30 மணிக்கு மேல் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக தெற்கு மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச்சந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் உமா, சுயேச்சையாக பொன்.முனியசாமி ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

திருச்சுழி தொகுதியில் திமுக வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் ராஜசேகர் ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் ராஜவர்மன், அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மான்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் லட்சுமி கணேசன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் கனகபிரியா திருத்தங்கலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

விருதுநகர் தொகுதியில் திமுக சார்பில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தேச மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விக்ரமன், சுயேச்சையாக வேலுச்சாமி ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்