புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 16) தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 16) பிரச்சாரம் செய்கிறார். விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து காலை 9 மணிக்கு விராலிமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
பின்னர், புதுக்கோட்டையில் வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து காலை 10.30 மணிக்கும், திருமயத்தில் வேட்பாளர் பி.கே.வைரமுத்துவை ஆதரித்து பகல் 12 மணிக்கும், அறந்தாங்கியில் வேட்பாளர் மு.ராஜநாயகத்தை ஆதரித்து பகல் 1.15 மணிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து, ஆலங்குடி வேட்பாளர் தர்ம.தங்கவேலை ஆதரித்து மாலை 3 மணிக்கு புளிச்சங்காடு கைகாட்டியில் பிரச்சாரம் செய்துவிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் தமிழக முதல்வர் பழனிசாமி, இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெயபாரதியை ஆதரித்து கந்தர்வக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார். அதன்பின், தஞ்சாவூரில் தங்கிவிட்டு மறுநாள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதனிடையே, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவைச் சேர்ந்த சிலர், முதல்வரின் பிரச்சார கூட்டத்தில் கோஷம் எழுப்ப உள்ளதாக வந்த தகவல் குறித்து உளவுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
இதேபோன்று, ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, கீரமங்கலத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். பின்னர், புதுக்கோட்டை, விராலிமலை தொகுதிகளைச் சேர்ந்த திமுக வேட்பாளர்கள் முறையே வி.முத்துராஜா, எம்.பழனியப்பன் மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து புதுக்கோட்டையில் நாளை (மார்ச் 18) மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago