திருப்பூர் மாவட்டத்தில் - நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலுக்கு நெருக்கடி : மத்திய அமைச்சருக்கு மா.கம்யூ. கடிதம்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு செயலாளர் செ.முத்துக்கண்ணன், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பிய கடிதத்தில், "ஜவுளி உற்பத்திக்கு ஆதாரமாக திகழும் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இத்தொழிலை நம்பி பிழைக்கும் பல லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதி மூலமாக ரூ.27 ஆயிரம் கோடியும், அந்நியச் செலாவணியும், உள்நாட்டு சந்தை உற்பத்தி மூலமாக ரூ.20 ஆயிரம் கோடி வர்த்தகமும் நடைபெறுகிறது.

மேலும், 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறது. 25 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக தமிழக ஜவுளித் தொழில் திகழ்கிறது. மூலப்பொருளான பஞ்சு, நூல் விலை ஏற்றத்தால், ஜவுளித் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.

கடந்த ஏழு மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.62 என்ற அளவுக்கு வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. வரக்கூடிய சில நாட்களிலும் கிலோவுக்கு மேலும் ரூ.10 வரைஉயர்த்த நூற்பாலை உரிமையாளர்கள் உத்தேசித்திருப்பதாகவும் தகவல் வருகிறது. இதனால், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

வெளிநாட்டு வர்த்தகர்களிடம் முன்கூட்டியே ஆடை விலை பேசி நிர்ணயித்த பிறகுதான், நூல் வாங்கி உற்பத்தி நடவடிக்கை தொடங்கப்படுகிறது. இதனால், நிர்ணயித்த விலையில் ஆடை உற்பத்தி செய்ய முடியாமல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுவதுடன், தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்