நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள்மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்ன சென்ட் திவ்யா ஆய்வு செய்தபின்பு கூறியதாவது: உதகை ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் கருவியை கையாள்வது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு நாளன்று மாதிரிவாக்குப்பதிவுகள் எப்போது தொடங்க வேண்டும், வாக்குப் பதிவு தொடங்கும் முன்பாக தவறாமல் மாதிரி வாக்குப் பதிவுகளை அழிப்பது, வாக்குப்பதிவு முடிந்த பின்பு பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலர்களிடம் வழங்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, பொள்ளாச்சி- உடுமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல் முன்னிலை வகித்தார். இதில், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் காணொலிக்காட்சி வழியாகவும், மாதிரி வாக்குச்சாவடி அமைத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குப்பதிவை சுமூகமாக நடத்துவது, வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால், அதை உடனடியாக சீரமைப்பது, வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைப்பது உள்ளிட்டவை குறித்து அலுவலர்களுக்கு விளக்கப்பட்டது. வாக்குப்பதிவு அலுவலர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago