திருவள்ளூர் மாவட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில் - 8 தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி :

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 8 தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக நேற்று முதல்கட்டப் பயிற்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,902 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு Gட்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு நேற்று சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள 13 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்குப் பதிவை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக முதல்கட்டப் பயிற்சி நடைபெற்றது.

இதில், பங்கேற்ற வாக்குச் சாவடி அலுவலர்கள் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குச்சாவடி நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களின் பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியில், திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி, பூந்தமல்லி, திருத்தணி தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களான ப்ரீத்தி பார்கவி, சத்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE