திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.24 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, அங்கு வாக்குப் பெட்டிகளை பாதுகாப்புடன் வைக்கவும், வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காக 1,371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் வரும் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் முதல் தளத்திலும், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் 2-ம் தளத்திலும் எண்ணப்படவுள்ளன.
அதேபோல, ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 3-ம் தளத்தில் எண்ணப்படவுள்ளன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணவும், தபால் வாக்குகளை எண்ண தனித்தனியாக அறைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தஅறைகளுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவத்தினர், காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள், நாற்காலிகள் அமைக்கப்படவுள்ளன. பத்திரிகையாளர்கள் அறைகளில் இருந்தபடியே செய்திகளை சேகரித்து வெளியிட தனியாக ஊடக மையம் அமைக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து இன்று (நேற்று) வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் ரூ.24 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதால், அவை பறிமுதல் செய்து மாவட்டகருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் பரிசுப் பொருட்களை இழந்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்பித்து அதை மீண்டும் திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’. என்றார்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகர், வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago